விரும்பியோ விரும்பாமலோ 13 ஐ ஏற்கவேண்டியது கட்டாயம் – சம்பிக்க

காலம் காலமாக வாதபிரதிவாதங்களுக்குள்ளாகியுள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏனெனில் அத்திருத்தம் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தம் குறித்து அனைத்து இன சமூகத்தினரையும் ஒன்றுப்படுத்தி பொதுக்கொள்கைக்கமைய ஒரு நிலைப்பாட்டிற்கு வந்து இவ்விடயத்திற்கு இறுதி தீர்மானத்தை காண்பது எமது பிரதான நிலைப்பாடாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலையோ,பாராளுமன்ற தேர்தலையோ நடத்தும் நிலையில் நாடு தற்போது இல்லை.நாடு சுயாதீனமான முறையில் வங்குரோத்து நிலைமையினை அடைந்து வருகிறது.எதிர்வரும் மாதங்களில் நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்தால் மியன்மார்,தென்கொரியா ஆகிய நாடுகளின் இராணுவ நிர்வாகமே நாட்டில் தோற்றம் பெறும்.இந்தியா மாத்திரம் உரிய நேரத்தில் 500 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்காமலிருந்திருந்தால் நாடு இம்மாதமே வங்குரோத்து நிலைமையினை அடைந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற 43ஆவது படையணியின் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளதை 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் ‘ஆல பால ஆர்டிகய’ புத்தகத்தின் ஊடாக தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

பெற்றுக் கொள்ளப்பட்ட அரமுறைமை கடன்களினால் எதிர்காலத்தில் ஏற்பட போகும் நெருக்கடி தொடர்பில் 2016ஆம் ஆண்டு ‘எதிர்கால நிதி நெருக்கடி’என்ற புத்தகத்தை வெளியிட்டேன்.

திறந்த பொருளாதார கொள்கையினால் நாடு பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது என அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடு பாரிய வங்குரோத்து நிலைமையினை அடைந்து வருகிறது. சுனாமி,சிவில் யுத்தம் ஆகியவற்றினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை குறுகிய காலத்திற்குள் சீர்செய்ய முடிந்தது.

நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்தால் அதில் இருந்து மீள்வது சாதாரண விடயமல்ல. 2010ஆம் ஆண்டு கிறீஸ் வங்குரோத்து நிலைமையினை அடைந்தது. 

இன்று வரை கிறீஸ் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையவில்லை. லெபனான் வங்குரோத்து நிலைமையில் இருந்து மீள்வதற்கு குறைந்தது 10 வருடங்களாவது அவசியமம் என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளமையினை இலங்கை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரசமுறை கடன்களை செலுத்துவது நாட்டுக்கு பாரிய சவாலாக காணப்படுகிறது. 2014ஆம் ஆண்டு மொத்த அரசமுறை கடன் 24 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாத்திரம் திருப்பி செலுத்தப்பட்ட 80 சதவீதமான அரசமுறை கடன்கள் 2014ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அரசாங்கம் பெற்றுக் கொண்டதாகும்.

நாடு தேசிய நிதி மோசடியை எதிர்க்கொண்டுள்ளது என்பதை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பயனற்ற பாரிய அபிவிருத்தி திட்டங்கள் தேசிய நிதி மோசடிக்கு பிரதான காரணியாக அமைந்தது. 

திட்டமிடலில்லாத அபிவிருத்திகள்,எல்லை கடந்த வணிக கடன்,பாரிய மோசடி ஆகியவை தற்போதைய நிதி நெருக்கடிக்கு பிரதான காரணியாக உள்ளன.

சேனாநாயக்க,பண்டாரநாயக்க,பிரேமதாஸ மற்றும் சந்திரிக்கா ஆகிய தலைவர்களின் காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அரசமுறை கடன்கள் தற்போதைய நிதி நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது என அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்க முடியாது.

1948ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையிலான அரசாங்கங்கள் 14 சதவீத அரச முறை கடன்களையும், 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் 08 சதவீதமான அரசமுறை கடன்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.

2010 தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அரசாங்கம் மாத்திரம் 78 சதவீத அரசமுறை கடன்களை பெற்றுக் கொண்டுள்ளது. 

கடன் பெற்று பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்தோம் என்று குறிப்பிடப்படும் அபிவிருத்திகளினால் பாரிய நிதி தேசிய வருமானத்திற்கு கிடைக்கப் பெறவில்லை.

பெற்றுக் கொள்ளப்பட்ட அரசமுறை கடனை மீள் செலுத்தாவிடின் நாடு சுயாதீனமான முறையில் வங்குரோத்து நிலைமையினை அடையும். நிதி நெருக்கடியினை வெற்றிக் கொள்ள 43ஆவது படையணி ஊடாக கொள்கை திட்டங்களை வகுத்துள்ளோம்.

அரச நிதி நிலைப்படுத்தல்

நாட்டின் நிதி நிலைமை தொடர்பிலான உண்மை தன்மையினை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.நடைமுறையில் உள்ள வரிக் கொள்கை திருத்தப்படுதல் அவசியமாகும்.வரி கொள்கை சமூக கட்டமைப்பிற்கமைய வகுக்கப்பட வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வெற்றிக்காக தூரநோக்கமற்ற வகையில் வரிக்குறைப்பு செய்ததால் 40 சதவீத தேசிய வருமானம் இல்லாதொழிக்கப்பட்டது.இத்தவறை கட்டாயம் திருத்திக் கொள்ள வேண்டும்.

அரச செலவு குறைத்தல்

வீண் அரச செலவுகள் பொருளாதார பாதிப்பை  தீவிரப்படுத்தும். நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தொடர்ந்து அரசாங்கம் நிர்வகிக்கும் போது அதன் தாக்கத்தை நடுத்தர மக்களே எதிர்க்கொள்ள வேண்டும். ஆகவே நட்டத்தில் உள்ள அரச நிறுவனங்கள் தொடர்பில் திறமான தீர்மானம் எடுத்தல் வேண்டும். நட்டத்தில் இயங்கும் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை அரசாங்கம் தொடர்ந்து நிர்வகிப்பது பயற்றதொரு செயற்படாகும்.

சர்வதேச சந்தை நம்பிக்கை

அரச நிதி மோசடி காரணமாக இலங்கை சர்வதேச சந்தையின் நம்பிக்கையை இழந்து விட்டது. திறந்த கொள்முதல் இல்லாத காரணத்தினால் சர்வதேச வர்த்தகர்கள் இலங்கையை புறக்கணித்து வருகிறார்கள். மக்கள் வங்கி, இலங்கை வங்கி வெளியிடும்  கடன்பற்று பத்திரத்தை சர்வதேச நிறுவனங்கள் ஏற்க மறுக்கும் நிலைமை தற்போது காணப்படுகிறது. இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தல்

நாட்டின் பொருளாதார நடவடிக்கையில் பாரம்பரிய விவசாயத்திற்கு முதனிலை வழங்குவது அவசியமாகும். தொழிற்துறை நிபுணத்துவம்,தொழினுட்ப நகர விருத்தி,படித்த இளம் தலைமுறையினருடனான பொருளாதார செயற்திட்டம் ஆகியவற்றின் ஊடாக தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தல் வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு

பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள அரசமுறை கடன்களை திருப்பி செலுத்துவதா அல்லது கடன் மறுசீரமைப்பு செய்வதா என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும். அரசமுறை கடன்களை திருப்பி செலுத்துவதற்கு சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பினை பெறுவது அவசியமாகும். அரசமுறை கடன் நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு எக்காரணிகளுக்காகவும் பாதிப்பை ஏற்படுத்த கூடாது.தேசிய வளத்தை பகடைகாயாக வைத்து அரசமுறை கடன்களில் இருந்து மீளும் கொள்கையினை இல்லாதொழிக்க வேண்டும்.

13ஆவது திருத்தம்,17,19ஆவது திருத்தம்

நாடு தொடர்பிலான தவறான நிலைப்பாட்டை சர்வதேசத்தின் மத்தியில் அரசாங்கம் தோற்றுவித்துள்ளது.இலங்கைக்கு நிபந்தனையில்லா கடன்களை வழங்கதற்கு கூட சர்வதேச நாடுகள் தயாரில்லை.அரசியலமைப்பில் 20ஆவது திருத்தம் ஜனநாயகத்தையும்,பாராளுமன்ற ஜனநாயகத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

20ஆவது திருத்தம் நீக்கப்பட்டு அரசியலமைப்பில் 17 மற்றும் 19ஆவது திருத்தங்களின் சிறந்த விடயங்களை மீண்டும் செயற்படுத்த வேண்டும்.

காலம் காலமாக வாதபிரதிவாதங்களுக்குள்ளாகியுள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக் கொள்ள வேண்டும் ஏனெனில் அது அரசியமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தம் தொடர்பில் அனைத்து இன சமூகத்தையும் ஒன்றுப்படுத்தி பொதுக்கொள்கைக்கமைய பரந்துப்பட்ட விவாதத்தை நடத்தி இறுதி தீர்மானத்தை காண வேண்டும்.

சர்வதேச உறவு

சீனாவிற்கும்,அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போருக்கு இலங்கை நடுத்தரப்பு நாடாக ஆக கூடாது.இந்தியா,பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய வலய நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

மேற்குறிப்பிடப்பட்ட கொள்கை திட்டத்தை செயற்படுத்த பாராளுமன்றில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 43ஆவது படையணியின் நோக்கம் மற்றும் கொள்கை குறித்து மக்கள் மத்தியில் இனிவரும் காலங்களில் பரந்துப்பட்ட விவாதத்தை முன்னெடுப்போம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் 2023.12ஆம் மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்.அவர் போட்டியிடவில்லையாயின் ஜனாதிபதி தேர்தல் 2014ஆம் ஆண்டு இடம்பெறும்.

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அல்லது 2024ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பொதுத்தேர்தலை அரசாங்கம் நடத்தலாம்.

ஜனாதிபதி தேர்தல்,பொதுத்தேர்தல் ஆகிய தேர்தல்களை நடத்தும் அளவிற்கு நாட்டின் நிதி நிலைமை காணப்படவில்லை.எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாத காலத்திற்குள் நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்து மியன்மார்,தென்கொரியா ஆகிய நாடுகளின் நிலைமையினை அடைவதை தடுக்க வேண்டும்.

இந்தியா மாத்திரம் 500மில்லியன் அமெரிக்க டொலர்களை  வழங்காமலிருந்திருந்தால் நாடு இம்மாதமே வங்குரோத்து நிலைமையினை அடைந்திருக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here