அனர்த்த முகாமைத்துவக்குழுவை நியமியுங்கள் – கிரியெல்ல

நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்கு கொரோனா வைரஸ் பரவலே பிரதான காரணம் என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அந்நெருக்கடிகளைக் கையாள்வதற்கு எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றார். 

ஆனால் உண்மையிலேயே ஆளுந்தரப்பிற்கு எமது ஒத்துழைப்பு அவசியமெனின், முதலில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் நெருக்கடிநிலையொன்று ஏற்பட்டிருக்கின்றது என்று பாராளுமன்றத்தில் அறிவித்து, அனர்த்த முகாமைத்துவக்குழுவொன்றை நியமித்திருக்கவேண்டும்.

எனினும் தற்போதுவரை அதனைச் செய்யாமல், எமது ஒத்துழைப்பைக்கோருவது நகைப்பிற்குரிய விடயமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி தற்போது நாடளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா வைரஸ் மிகவேகமாகப் பரவிவருவதாக சுகாதாரத்தரப்பினர் சுட்டிக்காட்டியிலுள்ள நிலையில், இனியேனும் அனர்த்த முகாமைத்துவக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்திய அவர், அதனூடாக அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி நிகழ்த்திய கொள்கைப்பிரகடன உரையை செவிமடுத்தோம். தற்போது நாடு முகங்கொடுத்திருக்கக்கூடிய அனைத்து நெருக்கடிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவலே அடிப்படைக்காரணம் என்று ஜனாதிபதி அந்த உரையில் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி இந்த நெருக்கடிகளுக்குத் திறம்பட முகங்கொடுத்து, அதிலிருந்து மீட்சியடைவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு எதிர்க்கட்சியிடம் கோருகின்றார். 

ஆனால் உண்மையிலேயே ஜனாதிபதிக்கும் ஆளுந்தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பு அவசியமெனின், முதலில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் நெருக்கடிநிலையொன்று ஏற்பட்டிருக்கின்றது என்று அவர்கள் பாராளுமன்றத்தில் அறிவிக்கவேண்டும். இருப்பினும் தற்போதுவரை அரசாங்கம் அதனைச்செய்யவில்லை.

அடுத்ததாக 2005 ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் பிரகாரம் ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களை உள்ளடக்கி அனர்த்த முகாமைத்துவக்குழுவொன்றை நியமித்திருக்கவேண்டும்.

எதிர்க்கட்சியினரான எமக்கு நாட்டின் நலனை முன்னிறுத்திய கருத்துக்களை பாராளுமன்றத்தில் மாத்திரமே முன்வைக்கமுடியும். எனவே அனர்த்த முகாமைத்துவக்குழுவை நியமிப்பதன் ஊடாக கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிநிலையை உரியவாறு கையாள்வதற்கு அவசியமான ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் எதிர்க்கட்சி உள்ளடங்கலாக அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளமுடியும்.

ஆனால் தற்போதுவரை ஜனாதிபதி அத்தகைய குழுவொன்றை நியமிக்காமல், நெருக்கடிகளைக் கையாள்வதற்கு எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பைக் கோருவது வேடிக்கையான விடயமாக உள்ளது.

 நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி தோற்றம் பெற்றதிலிருந்து அனர்த்த முகாமைத்துவக்குழுவை நியமிக்குமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

இருப்பினும் இதனைத் தம்மால் கையாளமுடியும் என்று அரசாங்கம் கூறியது. அதற்கமைய பாராளுமன்றத்தை சற்றேனும் பொருட்படுத்தாமல், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவ அதிகாரிகள் தலைமையில் குழுவொன்றை நியமித்தது. அவ்வாறிருக்கையில் இப்போது எதிர்க்கட்சியின் உதவியை நாடுவதென்பது வெறுமனே வெளியுலகிற்குக் காண்பிப்பதற்கான நாடகமேயன்றி வேறில்லை.

அதேவேளை 2005 ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் ஊடாக இத்தகைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்கமுடியும். குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கின்றார்கள். 

அவர்களுக்கு இழப்பீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது நாடளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா வைரஸ் மிகவேகமாகப் பரவிவருவதாக சுகாதாரத்தரப்பினர் சுட்டிக்காட்டியிலுள்ள நிலையில், இனியேனும் அனர்த்த முகாமைத்துவக்குழுவை நியமிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அவ்வாறு நியமிக்கும் பட்சத்தில், அதனூடாக அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

மேலும் பொருட்களின் விலையேற்றம், அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு, எரிவாயு சிலிண்டர் வெடிப்புப் பிரச்சினை, டொலர் பற்றாக்குறை உள்ளடங்கலாக தற்போது நாடு முகங்கொடுத்திருக்கக்கூடிய முக்கிய பிரச்சினைகள் எவற்றுக்கும் ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரையில் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. மாறாக 2030 ஆம் ஆண்டின் பின்னர் முடிவிற்குக்கொண்டுவரப்படக்கூடிய திட்டங்கள் குறித்து மாத்திரமே ஜனாதிபதி பேசினார். 

ஆனால் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட கொழும்புத்துறைமுகநகரம், தாமரைக்கோபுரம், அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமானநிலையம் போன்றவற்றால் எதிர்வரும் 10 வருடகாலத்திற்கு நாட்டிற்கு எவ்வித வருமானமும் கிடைக்கப்போவதில்லை.

குறிப்பாக கொழும்புத்துறைமுகநகரத்தில் நடைபாதையொன்று மாத்திரமே அண்மையில் திறந்துவைக்கப்பட்டிருக்கின்றதே தவிர, அதன் ஏனைய கட்டுமானங்கள் அனைத்தும் 2035 ஆம் ஆண்டளவிலேயே முடிவுறுத்தப்படும். எனவே அதுவரையில் அதனூடாக பெருந்தொகையில் வருமானம் ஈட்டமுடியாது என்று சுட்டிக்காட்டினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here