வவுனியா மாவட்டத்தில் இரு மாதங்களில் 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

வவுனியா மாவட்டத்தில் இரு மாதங்களில் 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மகேந்திரன்

வவுனியா மாவட்டத்தில் டிசம்பர் மற்றும் தற்போது வரை 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா பெரியார்குளத்தில் நேற்று நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

டெங்கு நோயாளர்கள் பொதுவாகவே டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையை சுகாதார திணைக்களத்தினாலேயே செய்ய வேண்டும் என்று பொதுவாக எல்லோரும் எண்ணுகின்றனர். தற்போது நகரசபை இவ்வாறான நிகழ்வுகளை முன்னின்று செய்வது வரவேற்கத்தக்க விடயம். டெங்கு என்பது சுகாதார பிரச்சினை மட்டுமல்ல இது ஒரு சமூக பிரச்சனையாகும். ஏனென்றால் நாங்கள் எங்களுடைய திண்மக்கழிவுகளை சரியான முறையில் மேற்கொள்ளாமையினாலேயே டெங்கு நோயினை பரப்பும் நுளம்புகளின் பெருக்கமாகும்.டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்புகளை நாங்கள் தடுப்பதன் மூலமே டெங்கு நோயை தடுக்க முடியும். மேலும் இதற்குரிய முயற்சியாகவே நகரசபை தலைவரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

வவுனியா மாவட்டத்தை பொறுத்த வரை டெங்கானது கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் எமக்கு அண்மையில் உள்ள யாழ் மாவட்டம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோய்த்தாக்கத்தின் வீரியம் அதிகமாக காணப்படுகின்றது. இவ்விரு மாவட்டங்களிலும் கடந்த வருட ஆரம்பத்தில் டெங்கு நோயாளர்களின் பெருக்கத்தை விட இந்த ஆண்டு ஆரம்பத்தில் மிக அதிகமாக காணப்படுகின்றது.


இதேபோன்று திருகோணமலை மாவட்டத்திலும், அதேபோன்று கொழும்பு, கம்பகா மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.


குறிப்பாக மேற்கூறிய மாவட்டங்களிற்கு வவுனியா மாவட்ட மக்கள் பல்வேறு தேவைகளிற்காக சென்று வர வேண்டிய தேவையுள்ளது. இவ்வாறு சென்று வருபவர்கள் மூலமாகவே வவுனியாவில் டெங்கு நோய் தொற்றாளர்களை அடையாளங்கண்டுள்ளோம்.

கடந்த மாதத்தை பொறுத்த வரை வவுனியா மாவட்டத்தில் 09 பேரே டெங்கு நோய் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். 2022 ஜனவரி மாதம் தற்போது வரை 11 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாதம் முடிவில் குறித்த எண்ணிக்கை அதிகரிக்க கூடிய சந்தர்ப்பம் உள்ளது என்று மேலும் தெரிவித்தார்.ShareTweetShare

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here