சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவோம் – பஷில்

சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வதற்காகவும், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை தக்கவைக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், ஆனால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஒருபோதும் கடன்களை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதையே நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமைச்சரவையில் தெரிவித்துள்ளாராம்.

நிதி நெருக்கடி நிலைமைகள் மற்றும் டொலர் பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கின்ற நிலையில் இறுதியாக கூடிய அமைச்சரவையில் இது குறித்து நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது குறித்த சில விடயங்களை தெளிவுபடுத்தியதாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கேசரிக்கு பகிர்ந்துகொண்டார். 

இதன்போது, இலங்கையின் நிதி நெருக்கடி நிலைமைகளை மிகப்பெரிய பூதாகரமாக எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்ற போதிலும் அரசாங்கத்தினால் நிலைமைகளை சரிசெய்ய முடியும். மார்ச் மாதத்திற்கு பின்னர் சுற்றுலாத்துறையின் வருவாய் அதிகரிக்கும். 

ஏனைய முதலீடுகளும் இப்போதே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சீனா மற்றும் இந்தியாவிடம் பெற்றுக்கொண்ட கடன்களை மீள் கட்டமைப்பு செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது. 

ஆகவே இவற்றை எம்மால் சரியாக கையாள முடியுமானால்  மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தின் பின்னர் மீண்டும் சுமூகமான நிலையை அடையலாம். அத்தோடு கடன்களையும் அடைக்க முடியும்.

எனினும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து எம்மிடத்தில் எந்த முரண்பாடுகளும் இல்லை. 

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, இலங்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்வதும் அதன் மூலமாக ஏனைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை நாடத் தயாராக உள்ளோம். 

ஒரு சில பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் எக்காரணம் கொண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை அமைச்சரவையில் நிதி அமைச்சர் கூறியுள்ளாராம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here