வட மாகாணம் மீதான மாற்றாந்தாய் கவனிப்பை நீக்கி அதியுச்ச அபிவிருத்தி முன்னுரிமை- சஜித்

வட மாகாணம் மீதான மாற்றாந்தாய் கவனிப்பை நீக்கி, அதியுச்ச அபிவிருத்தி முன்னுரிமையை, எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தாம் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கரவெட்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்திற்கு தெளிவான – துரித அபிவிருத்தித் திட்டம் அவசியமாகும்.

நீண்டகாலமாக இந்த மக்களின் வாக்குகளைப் பெற்று, இந்தப் பிரதேச மக்களுக்கு கனவு உலகத்தைக் காண்பித்த தலைவர்கள், தங்களின் கடமைகளையும், பொறுப்புகளையும் வட மாகாணத்திற்கு நிறைவேற்றவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில், நாம் நிச்சயமாக வடக்கு மாகாணத்தில் துரித அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்து, நாடுமுழுவதும் ஆரம்பிக்கும் கைத்தொழில் புரட்சியின் பிரதிபலனை வடக்கிற்கும் பெற்றுக்கொடுத்து, கைத்தொழிற் பேட்டைகளின் மூலம், வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி, வட மாகாணத்திற்கு பாரிய சேவை ஆற்றுவதற்கு திட்டமுள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், இந்த அரசாங்கம், நாட்டை மிகவும் கீழ் நிலைக்கு வீழ்த்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகால பலவீனமான ஆட்சியினால், பொருளாதாரத்தையும், சமூக நிலையையும் வீழ்ச்சியடையச் செய்துள்ளது.

நன்றாக இருந்த இந்த நாட்டு மக்களை ஏழைகளாக்கியமைதான் இந்த அரசாங்கம் ஆற்றிய ஒரே விடயமாகும்.

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப நாம் தயார்.

மக்களை மையப்படுத்திய அபிவிருத்தி, சமூகங்களுக்கு இடையிலான நட்புறவு, சமத்துவம் என்பனவற்றின் மூலம் நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

நாட்டுக்கு இருக்கும் மிகப்பெரிய பலம் ஒற்றுமையாகும்.

நாம் அனைவரும், எந்த இனம், எந்த குலம், எந்த சாதி, எந்தப் பின்னணியாக இருந்தாலும், நாடு என்ற அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்.

ஐக்கியமே நாட்டின் வெற்றியாகும்.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுங்கள், கட்டம் கட்டமாக தாய்நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

தாய்நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில், வட மாகாணத்திற்கு இதுவரையில் கிடைத்த மாற்றாந்தாய் கவனிப்பை நீக்கி, இந்த மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதியுச்ச அபிவிருத்தி முன்னுரிமையை, எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தாம் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here