பேருந்து- லாரி நேருக்கு நேர் மோதி 17 பேர் உயிரிழப்பு

பேருந்தும், எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 17 பேர் உயிரிழந்தனர்.  

ஜார்க்கண்ட் மாநிலம் பாகுர் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் தியோகர் மாவட்டம் நோக்கிச் சென்றுள்ளது. கோவிந்த்பூர்-சாஹிப்கஞ்ச் மாநில நெடுஞ்சாலையில் காலை 8:30 மணியளவில் பேருந்து வேகமாக சென்றப்போது, எதிர் திசையில் வந்த சிலிண்டர் லாரி திடீரென பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் பேருந்திற்குள் இருந்த 17 பேர் உயிரிழந்தனர். மற்றும் 26 பேர் காயமடைந்தனர். பேருந்தில் சிக்கியிருந்தவர்களில் பலர், கேஸ் கட்டர் மூலம் வாகனத்தை பிரித்த பின்னர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து காரணமாக அச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

அப்பகுதியில் நிலவும் கடும் மூடுபனியே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. லாரியில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் எதுவும் வெடிக்கவில்லை என்பதால் பெரியளவில் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இதனிடையே விபத்தில் சிக்கியவர்களில் பலரின் நிலைமை மருத்துவமனைகளில் மோசமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here