தமக்கு விடுமுறை வழங்கப்படாமையினால் அம்பாறை – திருக்கோவில் காவல்துறை நிலையத்தில், காவல்துறை உத்தியோகத்தர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
நேற்றிரவு நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் திருக்கோவில் காவல்துறை நிலையத்தில் சேவையாற்றிய நால்வர் பலியாகினர்.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட 38 வயதான சந்தேகநபர், அதன் பின்னர், தமக்கு சொந்தமான தனிப்பட்ட கெப் ரக வாகனத்தின் மூலம், தமது சொந்த ஊரான எத்திமலை பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, எத்திமலை காவல்துறையில் சரணடைந்த நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து, இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகளும், 19 தோட்டாக்களும் மீட்கப்பட்டன.
இந்நிலையில் சந்தேகநபர், அக்கரைப்பற்று நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து, அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அம்பாறை – திருக்கோவில் காவல்நிலையத்தில் நேற்றிரவு 10.30 முதல் 11 மணிவரையிலான காலப்பகுதியில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு 10.30 அளவில் காவல்நிலையத்திற்கு சென்ற குறித்த காவல்துறை உத்தியோகத்தர், முதலாவது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது வெளியில் சென்றிருந்த காவல்நிலைய பொறுப்பதிகாரி, மீள திரும்பிய நிலையில் அவரது வாகனத்தின் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில், மூவர் சம்பவ இடத்தில் பலியாகினர்.
அத்துடன், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார்.
இதேவேளை, இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் விசேட விசாரணை பிரிவினரிடம் காவல்துறைமா அதிபர் ஒப்படைத்துள்ளார்.