திருகோணமலை மீனவ சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை நகரை அண்மித்த கடல் பிராந்தியத்தில் சிறு வள்ளங்களை உபயோகித்து தூண்டல்கள் மூலமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவ சமூகத்தினர் இன்று காலை திருகோணமலை  மணிக்கூண்டு கோபுரத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சிறு வளங்களின் மூலமாக தூண்டில்களை உபயோகித்து குறித்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடும் கடற்பகுதியில் ஒரு சில பாரிய மீனவப் படகுகள் வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதன் காரணமாக தாம் மீன்பிடியில் ஈடுபடும் பகுதிகளில் மீன்வளம் பாதிப்பிற்குள்ளாவதால்தாம் முற்றாக பாதிக்கப்படுவதாக வலியுறுத்தி குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து வடகரை வீதியூடாக கடல் முக வீதி வரை பேரணியாக சென்று குறித்த மீனவர்கள்தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியபோது, காவல்துறையினரால் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டு இடை மறிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர்.


 அதன் பின்னராக மீண்டும் மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் ஒன்றுகூடிய மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த முயற்சித்தபோது காவல்துறையினர் அவ்விடத்துக்கு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன்  பின்னராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்
இதன்போது கருத்து தெரிவித்த மீனவர்களில் ஒரு சிலர் குறித்த சட்ட விரோதமான செயலில் ஈடுபடுபவர்களை  தடுத்து நிறுத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை எனவும் கடற்படையினரது கட்டுப்பாட்டு பகுதிகளில் குறித்த செயற்பாடானது முன்னெடுக்கப்படுவதனால் அதனை கடற்படையினர் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.


சம்பத்தப்பட்ட அதிகாரிகள் இதனை தடுத்து நிறுத்தாத பட்சத்தில் இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்க்கூடும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here