கிண்ணியா குருஞ்சாக்கேணி சம்பவம் தொடர்பான அமைச்சரின் அறிக்கை

22

கிண்ணியா குருஞ்சாக்கேணி கலப்பின் ஊடாக பாலம் நிர்மாணிக்கப்படும் வரை மூன்றரை கிலோ மீற்றர் தூரமான மாற்று வழியொன்றை பயன்படுத்துவதற்கு கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை அங்கத்தவர்கள் முழுமையான சம்மதம் தெரிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், இந்தப் பாதை அதிக தூரம் கொண்டது எனக்கூறி பிரதேச அரசியல்வாதிகளும், மக்களும் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்ததாக கிராமிய வீதிகள் விசேட உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

விசேடமாக அந்தப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2021.07.09 ஆம் திகதி அன்று மூன்றரை மீற்றர் தூரமான பாதைக்கு பதிலாக மாற்று வழி ஒன்றை பயன்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன்வைத்தனர். இந்தக் கலப்பின் ஊடான படகுச் சேவை ஒன்றை ஆரம்பிக்கவே கோரிக்கை விடுத்தனர்.

இந்த யோசனையை கொள்கை ரீதியாக நாம் ஏற்றுக் கொண்டோம்.

படகுச் சேவையை ஆரம்பிக்க தனியார் துறையினர் இருக்கின்ற போதிலும் ஏன் இன்னும் ஆரம்பிக்கவில்லையென பிரதேச மக்கள் பிரதிநிதிகள் எம்மிடம் கேள்வி எழுப்பினர். பல கோரிக்கைகள் முன் வந்த போதும் முறையான தரங்களுக்கு அமைய சேவையை ஆரம்பிக்க வேண்டுமென்ற நோக்கில் நகரசபை, பிரதேச சபை அங்கத்தவர்கள் உட்பட தனியார் துறைக்கு அனுமதி கொடுக்கவில்லை. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் படகுச் சேவைக்கு மாத்திரமே நாம் அனுமதி வழங்கினோம்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் படகுச் சேவையை ஆரம்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் எம்மிடம் கோரிக்கை விடுத்தார். அவ்வாறே, ஏனைய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலித்து ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊடாக சரியான தரம் மற்றும் எமது நிறுவன பொறியியலாளர்களின் ஆலோசனையை முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்தோம். இதனடிப்படையில் ஒப்பந்த நிறுவனம் வழங்கிய தீர்மானத்தின் அடிப்படையில் 2021 ஜுலை மாதம் 14ஆம் திகதி வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் படகுச் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்தச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 2021 ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி கிண்ணியா நகர சபை எமது அனுமதியின்றி வெளிநபர்களுக்கு படகுச் சேவையை நடத்திச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் படகுச் சேவை முன்னெடுத்துச் செல்லப்படும் நிலையில் தான் இந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் முறையான பரிசீலனை நடைபெற்று வருவதாக கிராமிய வீதிகள் விசேட உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here